விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டு காவலில் சிறை வைப்பு
- அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
- போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:
விவசாயிகளின் விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாயிகளின் வேளாண் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் தியானம் இருக்கும் நரேந்திர மோடியை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம் நடத்த புறப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசார் இன்று காலை திருச்சி மலர் சாலை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவரை அங்கிருந்து வெளியில் செல்ல விடாமல் வீட்டு காவலில் சிறை வைத்தனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் சிக்கியுள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.