துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகள்
- 1243 துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு- புத்தாடைகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.
ராஜபாளையம்
ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.குமாரசாமிராஜா திருமண மண்டபத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியா ளரான தூய்மைப் பணியாளர்களை பாராட்டி கவுரவப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 3-வது முறையாக ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள் 1243 பேருக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கொரோனா காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் தொற்று பரவாத வகையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடனும் சிறப்பாகவும் பணியாற்றிய முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் கோவில்கள் கூட மூடி இருந்தது. ஆனால் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் சிறப்பாக பணியாற்றி ராஜபாளையம் தொகுதியில் கொரோனா தாக்கத்தை குறைத்துள்ளீர்கள். உங்களை பொதுமக்கள் கடவுள் போல் எண்ணி மலர் தூவி வணங்கினர் என்றார்.
இந்த நிகழ்வில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம்ராஜா, தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா,(தெற்கு) ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.