மதுரையில் சமாதானம் பேச சென்றபோது நண்பர்களுக்கிடையே மோதல்- வாலிபர் கொலை
- கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர்.
- போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கார்த்திக் (வயது 29). திருப்பரங்குன்றம் மேலப்பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திர பிரசாத் (21) மற்றும் சண்முகராஜ் (24). நண்பர்களான மூன்று பேரும் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்றனர்.
இவர்களுக்கிடையே கடந்த தீபாவளி பண்டிகையின் போது ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறி கைகலப்பில் முடிந்தது. அப்போது முதல் அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவருக்கொருவர் ஒரே இடத்தில் வேலை பார்த்தபோதும் பேசாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் வீட்டிற்கு சமாதானம் பேச ராஜேந்திர பிரசாத், சண்முகராஜ் ஆகிய இருவரும் சென்றனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மீண்டும் தகராறு உருவானது. இதில் ராஜேந்திர பிரசாத், கார்த்திக்கை அருகில் இருந்த தராசு படிக்கல்லை எடுத்து தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது வீட்டில் இருந்த சூரிக் கத்தியை எடுத்து வந்து ராஜேந்திர பிரசாதின் தோள்பட்டையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திர பிரசாத் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திர பிரசாத் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திக் மற்றும் சண்முகராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவில் சமாதானம் பேச சென்ற வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.