பழையங்குடியில், 2000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் புனரமைக்கபடுமா?
- கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
- ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவில்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, ஆலத்தம்பாடி அருகே பழையங்குடி எனும் கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் கரிகால சோழன் காலத்துக்கு முற்பட்டு அரசியார் வேண்டு–கோள்படி சிவனுக்கு தோஷ பரிகாரத்துக்காக கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் வருமானம் ஏதும் இல்லாததால் முறையாக பராமரிக்கப்–படாமல் கோபுரங்களில் செடி, கொடிகள் மண்டியும், சுற்றுச்சுவர்கள் சேத–மடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
மேலும், இங்கு பணி செய்யும் அர்ச்சகருக்கு கூட பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
கோவிலை சுத்தம் செய்வதற்கு என யாரையும் நியமிக்கவில்லை என்ற விஷயம் பக்தர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் நான்கு கால பூஜை ராஜமரியாதையுடன் நடந்த கோவிலில் தற்போது, ஒரு கால பூஜை நடைபெறுவதற்கே தடுமாறுகிறது.
இக்கோவிலுக்கு என அறநிலையத்துறையால் தனியாக செயல் அலுவலர் யாரும் நியமிக்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலரும், திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவருமான வக்கீல் நாகராஜன் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.