இந்தியா

கார் மீது லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Published On 2022-11-02 18:40 IST   |   Update On 2022-11-02 18:40:00 IST
  • நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு காரில் திரும்பியபோது விபத்து
  • தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள குவாலியர்- மொரேனா சாலையில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குவாலியர் பகுதியில் இருந்து நோயுற்ற உறவினர் ஒருவரை பார்த்துவிட்டு மொரேனாவில் உள்ள பித்தோலி கிராமத்திற்கு காரில் 8 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய லாரி ஓட்டுனரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News