ஒரு வாரத்திற்கு பிறகு உரிமையாளரை சந்தித்த நாயின் பாசப்போராட்டம்- வைரலாகும் வீடியோ
- நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.
- சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.
திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் தப்பியிருக்கின்றனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு நிவராரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். அவர்களில் ஒருசிலரை தவிர பெரும் பாலானவர்கள், நிலச்சரிவில் தங்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்துவிட்டனர்.
அவர்கள் கண்ணீர் வடித்தபடி நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். பலர் மண்டோடு புதைந்தது, வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது உள்ளிட்டவைகளை நேராக பார்த்த அவர்கள், அந்த காட்சிகளை மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பலரது குடும்பத்தினர் இன்னும் கிடைக்கால் இருக்கின்றனர்.
இதனால் அவர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடிக்க உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று தங்களின் உறவுகளை தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் தாங்கள் செல்லமாக வளர்த்த நாய் உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் தேடி அலைகிறார்கள்.
அப்படி தேடியதில் பெண் ஒருவர் தனது செல்ல நாயை ஒரு வாரத்திற்கு பிறகு பார்த்து உள்ளார். நாய் மற்றும் பெண்ணுக்கு இடையே நடந்தை பார்த்த அனைவரையும் கலங்க செய்தது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
வயநாடு சூரல்மலை பகுதியை சேர்ந்தவர் உமா பாலகிருஷ்ணன். வயநாடு நிலச்சரிவில் இவர் தனது குடும்பத்தினருடன் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவு ஏற்பட்டு விட்டதை அறிந்த அவர்கள், தங்களின் வீட்டில் இருந்து வெளியேறி ஓடினர். இருள்சூழ்ந்த அதிகாலை நேரத்தில் தட்டுத்தடுமாறி சென்றனர்.
அப்போது அவர்களுடன் அவர்கள் வளர்த்த செல்ல நாயும் ஓடி வந்தது. ஆனால் சிறிது தூரத்திற்கு பிறகு அவர்களது நாயை காணவில்லை. உயிர் பிழைப்பதற்காக ஓடியபடி இருந்த உமா மற்றும் அவரது குடும்பத்தினர் நிவாரண முகாமுக்கு சென்று தங்கினர்.
தனது குடும்பத்தினர் அனைவரும் தப்பிவிட்ட நிலையில், தாங்கள் செல்லமாக வளர்த்தநாய் என்ன ஆனது? என்று தெரியாமல் உமா தவித்த படி இருந்தார். அதனை கண்டுபிடிப்பதற்காக சூரல்மலை பகுதிக்கு நேற்று சென்றார். எங்காவது தனது நாய் இருக்கிறதா? என்று பார்த்தார்.
அப்போது ஒரு இடத்தில் அவரது வளர்ப்பு நாயை கண்டுபிடித்தார். உமாவை பார்த்த அந்த நாய் வேகமாக ஓடிவந்தது. உமாவின் காலை சுற்றிசுற்றி வந்து செல்லமாக குறைத்தது. நாயை பார்த்த உமா அதனை அரவணைத்தார். நாயின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு கொஞ்சினார். அவர்களது பாசப்போாட்டத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
சிறிதுநேரம் செல்ல நாயை கொஞ்சியபடி இருந்த உமா, நிவாரண முகாமுக்கு செல்ல புறப்பட்டார். அவரை சுற்றியபடியே நாய் இருந்தது. அதனை பிரிந்துசெல்ல மனமில்லாமல் உமா அங்கிருந்து விடைபெற்றார். அவர் சென்ற வாகனத்தை அவரது செல்ல நாய் சில கிலோமீட்டர் தூரம் வரை பின்தொடரந்து ஓடியது.
பார்த்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்த இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
A dog who missed his family in wayanad Finally met them after 6 days of struggle ?❤️ #WayanadDisaster #WayanadLanslide pic.twitter.com/JBjqtBR54x
— முத்து (@Muthuhere3) August 4, 2024