இந்தியா

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்


மணிப்பூரில் கலவரம் நீடிக்க பா.ஜனதா விரும்புகிறது: காங்கிரஸ் கடும் தாக்கு

Published On 2023-06-20 07:48 IST   |   Update On 2023-06-20 07:48:00 IST
  • இந்த கலவரம் சுமார் 50 நாட்களாக நீடித்து வருகிறது.
  • இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி :

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ந்தேதி மூண்ட கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப்போது நடந்து வரும் மோதல்களில் உயிரிழப்புகள் தொடர்கின்றன.

சுமார் 50 நாட்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே நாட்களை கழித்து வருகின்றனர்.

மாநிலத்தில் நீடித்து வரும் கலவரம் தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குறைகூறி வருகிறது. இந்த விவகாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூர் மாநிலம் 49 நாட்களாக எரிகிறது. இது குறித்து ஒருவார்த்தை கூட கூறாமல், 50-வது நாளில் பிரதமர் மோடி வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்கிறார்.

மாநிலத்தில் நூற்றுக்கணக்கானோர் மாண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்திருக்கின்றனர். எண்ணற்ற தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து மோசமாகி வரும் இந்த கலவரம் மிசோரமிலும் பரவ தொடங்கி உள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமரை தலையிட வலியுறுத்துவதற்காக அவரை சந்திக்க கடந்த பல நாட்களாக மணிப்பூர் தலைவர்கள் நேரம் கேட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் ஒதுக்கப்படவில்லை.

இவ்வாறு மணிப்பூர் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புறக்கணிக்கப்படுவது, பிரதமர் மோடியும், பா.ஜனதாவும் மோதலை நீடிக்க விரும்புவதையே காட்டுகிறது. தீர்வு காண விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

விஸ்வகுரு என தன்னைத்தானே கூறிக்கொள்பவர், மணிப்பூரின் குரலுக்கு எப்போது செவிமடுப்பார்?

அவர் (பிரதமர் மோடி) எப்போது நாட்டுக்கு அமைதிக்கான எளிய அழைப்பு விடுப்பார்? அமைதியை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்த மத்திய உள்துறை மந்திரி மற்றும் மணிப்பூர் முதல்-மந்திரியிடம் எப்போது அவர் கேள்வி எழுப்புவார்?

இவ்வாறு கே.சி.வேணுகோபால் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே இம்பால் மேற்கு மாவட்டத்தின் கண்டோ சபல் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் மேலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதைப்போல சிங்மாங் பகுதியில் 3 வீடுகளுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்தனர். எனினும் ராணுவ வீரர்கள் வேகமாக செயல்பட்டு அதை அணைத்தனர்.

இந்த சம்பவங்களால் இம்பால் மேற்கு மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News