இந்தியா

வெல்ல பாகு மீது 50 சதவீத ஏற்றுமதி வரி

Published On 2024-01-17 03:06 GMT   |   Update On 2024-01-17 03:06 GMT
  • எத்தனால் தயாரிக்க கரும்பில் இருந்து கிடைக்கும் துணை பொருளான வெல்ல பாகு முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.
  • நடப்பு பருவத்தில், கரும்பு உற்பத்தி 37 மில்லியன் டன்னில் இருந்து 33 மில்லியன் டன்னாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில், பெட்ரோலில் எத்தனால் என்னும் திரவ பொருளை அதிக அளவில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 10 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, பெட்ரோலுடன் 15 சதவீத எத்தனால் கலக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்கு எத்தனால் அதிகமாக தேவைப்படும் என்று தெரிகிறது.

எத்தனால் தயாரிக்க கரும்பில் இருந்து கிடைக்கும் துணை பொருளான வெல்ல பாகு (மொலாசஸ்) முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது. ஆனால், வெல்ல பாகுவை வியட்நாம், தென்கொரியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

அதை தடுத்து, உள்நாட்டில் வெல்ல பாகு வரத்தை அதிகரிப்பதற்காக, வெல்ல பாகு மீது மத்திய அரசு 50 சதவீத ஏற்றுமதி வரி விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு, நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், எத்தனால் தயாரிக்கும் உள்நாட்டு ஆலைகளுக்கு போதுமான அளவு வெல்ல பாகு கிடைக்கும்.

நடப்பு பருவத்தில், கரும்பு உற்பத்தி 37 மில்லியன் டன்னில் இருந்து 33 மில்லியன் டன்னாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், மத்திய அரசு ஏற்றுமதி வரி விதித்துள்ளது.

Tags:    

Similar News