பேரிடர் நிவாரண நிதி: கேரளா கேட்டது ரூ.2000 கோடி.. மத்திய அரசு வழங்கியது ரூ.145.6 கோடி
- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.
- மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடியும் ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடியும் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழையினால் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்தது. இதனால், பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5,858.60 கோடியை விடுவித்து உள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவிற்கு ரூ.1,492 கோடி, ஆந்திராவிற்கு ரூ.1,036 கோடி, அசாமிற்கு ரூ.716 கோடி, பீகாருக்கு ரூ.655.6 கோடி, குஜராத்துக்கு ரூ.600 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.468 கோடி, தெலங்கானாவிற்கு ரூ.416.8 கோடி, இமாச்சலப்பிரதேசத்துக்கு ரூ.189.2 கோடி, கேரளாவிற்கு ரூ.145.6 கோடி, மணிப்பூருக்கு ரூ.50 கோடி, திரிபுராவுக்கு ரூ.25 கோடி, சிக்கிமுக்கு ரூ.23.6 கோடி, மிசோராமிற்கு ரூ.21.6 கோடி, நாகாலாந்துக்கு ரூ.19.2 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கேரளா அரசு 2000 கோடி நிவாரண தொகை கூறியிருந்த நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.145.6 கோடி மட்டும் தான் ஒதுக்கியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வழிகாட்டுதலின்படி, 21 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டில் பேரிடர் மீட்பு நிதியாக ரூ.14,958 கோடிக்கும் கூடுதலான நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.9,044.80 கோடியும், மத்திய நிதியிலிருந்து ரூ.4,528.66 கோடியும், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,385.45 கோடியும் அடங்கும். இதில், வெள்ளம் பாதித்த 14 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.5,858.60 கோடி நிதியை விடுவித்துள்ளது.