இந்தியா

20 ஆண்டுகளுக்கு முன்பே மரணம்... சாமியார் வேடத்தில் சுற்றி திரிந்த மோசடி மன்னன் தமிழ்நாட்டில் கைது

Published On 2024-08-06 09:34 GMT   |   Update On 2024-08-06 09:34 GMT
  • போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.
  • 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்கு தப்பி சென்றார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நபரை வங்கி மோசடி வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது.

2002 ஆம் ஆண்டு சலபதி ராவ் என்பவர் எஸ்.பி.ஐ. வங்கியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பல போலியான ஆவணங்களை கொடுத்து 50 லட்சம் வரை இவர் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ 2004 ஆம் ஆண்டு 2 குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து சலபதி ராவ் தலைமறைவானார்.

இதனையடுத்து தனது கணவரை காணவில்லை என்று அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு 7 ஆண்டுகளாக காணாமல் போனதால் தனது கணவர் இறந்து விட்டதாக அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கின் முடிவில் சலபதி ராவ் இறந்து விட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

ஆனாலும் இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரித்து வந்தது. அவர்களின் விசாரணையில், சலபதி ராவ் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சேலத்திற்கு தப்பிச் சென்று தனது பெயரை வினீத் குமார் என்று மாற்றிக்கொண்டு அப்பெயரில் ஆதார் கார்டையும் பெற்றுள்ளார். அதன்பிறகு வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

ஆனாலும் சலபதி ராவ் தனது முதல் மனைவியின் மகனுடன் தொடர்பில் இருந்ததை அவரது இரண்டாவது மனைவி மூலம் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, 2014 ஆம் ஆண்டு 2 ஆவது மனைவிக்கு தெரியாமல் சேலத்தை விட்டு வெளியேறி, போபாலுக்குச் சென்று, கடன் வசூலிக்கும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பின்னர் உத்தரகாண்டில் உள்ள ருத்ராபூருக்கு சென்று ஒரு பள்ளியில் பணிபுரிந்துள்ளார். அந்த இடத்தை கண்டுபிடித்து 2016 ஆம் ஆண்டு சிபிஐ அங்கு வந்த போது அங்கிருந்து அவர் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து அவுரங்காபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்து தனது பெயரை ஸ்வாமி விதிதாத்மானந்த் தீர்த்தா என்று அவர் மாற்றிக் கொண்டு அதன் பெயரில் ஒரு ஆதார் கார்டையும் வாங்கியுள்ளார்.

ஆனால் 2021 டிசம்பரில் ஆசிரமத்தின் மேனேஜர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மோசடி செய்து விட்டு அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அதைத் தொடர்ந்து அவர் ராஜஸ்தானில் உள்ள பரத்பூருக்கு சென்று 2024 ஜூலை 8 வரை அங்கேயே தங்கி இருந்தார். பின்னர் திருநெல்வேலிக்கு வந்தவர் இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார்,

இதனை தெரிந்துகொண்ட சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலி நரசிங்க நல்லூர் கிராமத்தில் இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர்.

Tags:    

Similar News