இந்தியா

பட்னாவிஸ் பா.ஜனதா தலைவராவதை நான் எதிர்த்தேன்: ஏக்நாத் கட்சே

Published On 2023-03-17 03:53 GMT   |   Update On 2023-03-17 03:53 GMT
  • மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே.
  • இவர் பாஜகவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

மும்பை :

மகாராஷ்டிரா பா.ஜனதா கட்சியில் பெரும் தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. இவர் 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை மந்திரியாக இருந்தபோது நில பேரம் தொடர்பான மோசடி வழக்கில் சிக்கினார். இதற்காக மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.எல்.சி. ஆனார்.

இந்தநிலையில் மேல்-சபையில் பேசிய ஏக்நாத் கட்சே, பா.ஜனதா கட்சி மறைந்த தலைவர் கோபிநாத் முண்டேவை மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

மேலும் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து அவர் கூறியதாவது:-

பா.ஜனதா பணம் படைத்த பெரிய மனிதர்களுக்கான கட்சி என்ற எண்ணத்தை மாற்றி மக்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்தவர் கோபிநாத் முண்டே. ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் பா.ஜனதா அவரை மறந்துவிட்டதாக தெரிகிறது.

2014-ம் ஆண்டுக்கு முன்பு தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்படுவதை நான் எதிர்த்தேன். ஆனால் அப்போது கட்சியின் மூத்த தலைவராக இருந்த கோபிநாத் முண்டே எனது ஆட்சேபனையை நிராகரித்தார்.

பா.ஜனதாவின் வளர்ச்சியில் கோபிநாத் முண்டேவின் பெரும் பங்களிப்பு இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தையும் இப்போது மறந்துவிட்டார்கள். முண்டேவின் குடும்பமும், நானும் சில காலம் கட்சியில் அறிவிக்கப்படாத புறக்கணிப்பை எதிர்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோது ஏக்நாத் கட்சே முதல்-மந்திரி போட்டியில் இருந்தார். ஆனால் கட்சி அவருக்கு பதிலாக தேவேந்திர பட்னாவிசை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News