இந்தியா

ஞானவாபி மசூதி: இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published On 2024-04-01 13:04 GMT   |   Update On 2024-04-01 13:04 GMT
  • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது
  • அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர்களால் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வாரணாசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் சில மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த வாரணாசி கோர்ட்டு, மசூதிக்குள் கள ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு உத்தரவிட்டது.

கள ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் உள்ள ஒரு தொட்டிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. ஆனால், அது நீரூற்று பகுதி என்றும் தொழுகைக்கு வருபவர்கள் கை, கால் கழுவுவதற்காக அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது என்றும் மசூதி நிர்வாகம் தெரிவித்தது.

ஞானவாபி மசூதி வளாகத்தில் தரைகீழ் தளத்தில் உள்ள சீல் வைக்கப்பட்ட பகுதிக்குள் சென்று இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.

வாரணாசி கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெ ஹமியா மசூதி குழு அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் இந்த அப்பீல் மனுவை விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட பிறகு கடந்த 15-ந்தேதி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. மசூதி கமிஷன் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து பூஜை மற்றும் வழிபாடு செய்ய அனுமதி வழங்கி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 'ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பாக மசூதி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags:    

Similar News