இந்தியா

அரசின் ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது: ஜனாதிபதி உரைக்கு எதிர்க்கட்சிகள் பதில்

Published On 2024-06-27 13:37 GMT   |   Update On 2024-06-27 13:37 GMT
  • நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?.
  • அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அப்போது பொருளாதாரம், எமர்ஜென்சி உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

இந்த நிலையில் மத்திய அரசு தயார் செய்த ஸ்கிரிப்ட், பொய்கள் நிறைந்தது என எதிர்க்கட்சிகள் பதில் அளித்துள்ளனர்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

நான் கூறுவது இந்தியா ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது குறித்தது. இது விவசாயிகளை வளப்படுத்தியதா? நாம் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்றால், ஏன் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்?. அக்னிவீர் போன்ற திட்டம் ஏன்?. அரசி விலையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை?.

முதலீடு இருந்தால் நாம் அதிக வளர்ச்சியை பார்க்க முடியும். தனிப்பட்ட நபர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்க முடியாது. இது நமது எண்ணிக்கையை மேம்படுத்தலாம் ஆனால் விவசாயிகள், ஏழைகள் மற்றும் மிகவும் சுரண்டப்பட்டவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது. எமர்ஜென்சியின் போது ஜெயிலில் இருந்தவர்களுக்கு பாஜக என்ன செய்தது?. சமாஜ்வாடி அவர்களுக்கு மரியாதை கொடுத்தது, பென்சன் வழங்கியது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா

அரசால் கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்-ஐ ஜனாதிபதி படித்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லை என்பதை பாஜக இன்னும் உணரவில்லை. பாஜக 303-ல் இருந்து 240-க்கு வந்ததை உணராததுதான் அரசின் பிரச்சனை. 303 மெஜாரிட்டி அடிப்படையில் இந்த உரை தயார்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான், அரசாங்கம் உண்மையில் மெஜாரிட்டி இல்லாமல் இருக்கும்போது தெளிவான பெரும்பான்மை அரசாங்கம் இருப்பதாக அவர் கூறினார் (இநதிய மக்கள் நிலையான அரசை தனி மெஜாரிட்டியுடன் 3-வது முறையாக தேர்ந்தெடுத்துள்ளதாக உலகம் பார்க்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்).

காங்கிரஸ் தலைவர் தரிக் அன்வர்

பழைய உரைகளில் கொஞ்சம் மாற்றம் செய்துள்ளனர். பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட ஜனாதிபதி உரையில் புதிதாக ஏதும் இல்லை. எமர்ஜென்சிக்குப் பிறகு ஏராளமான தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை.

Tags:    

Similar News