இந்தியா

அரிந்தம் பக்சி

குஜராத் கலவர ஆவணப்படம் - பிபிசிக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

Published On 2023-01-19 23:54 GMT   |   Update On 2023-01-19 23:54 GMT
  • குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
  • இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.

இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.

இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:

பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.

இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.

இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News