இந்தியா

சைபர் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்-பிரதமர் மோடி

Published On 2024-10-27 08:22 GMT   |   Update On 2024-10-27 08:22 GMT
  • டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் வானொலியில் உரை யாற்றி வருகிறார். இன்று 115-வது நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-


ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. இன்று மன் கி பாத்தில், தைரியமும் . தொலைநோக்கு பார்வையும் கொண்ட 2 பெரிய ஹீரோக்கள் பற்றி நான் விவாதிக்கிறேன். அவர்களின் 150-வது பிறந்தநாளை கொண்டாட நாடு முடிவு செய்துள்ளது.

சர்தார் படேலின் 150-வது பிறந்தநாள் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் நவம் பர் 15 முதல் தொடங்குகிறது. இந்த 2 பெரிய மனிதர்களுக்கும் வெவ்வேறு சவால்கள் இருந்தன, ஆனால் நாட்டின் ஒற்றுமை'தான் அவர்களின் பார்வையாக ஒரே மாதிரியாக இருந்தது.

இந்த பண்டிகை காலத்தில், ஆத்மநிர்பர் பாரதத்தின் இந்த பிரச்சாரத்தை நாம் அனைவரும் வலுப்படுத்துவோம். இந்தியாவை நாம் தன்னிறைவு கொண்டதாக மாற்றுவது மட்டுமின்றி, புதுமைகளின் உலகளாவிய சக்தியாக நம் நாட்டை நிலைநிறுத்த வேண்டும்.

இளைஞர்கள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அசல் இந்திய உள்ளடக்கத்தை உருவாக்குகிறார்கள். அவை உலகம் முழுவதும் கண்காணிக்கப்படுகின்றன. அனிமேஷன் துறை இன்று மற்ற தொழில்களுக்கு பலம் கொடுக்கும் ஒரு தொழிலாக உருவாகியுள்ளது.

உலக அனிமேஷன் தினம் அக்டோ பர் 28 அன்று (நாளை) கொண்டாடப்படும். உலக ளாவிய அனிமேஷன் அதிகார மையமாக இந்தியாவை மாற்ற நாம் உறுதி அளிக்க வேண்டும்.

தன்னம்பிக்கை என்பது நமது கொள்கையாக மட்டும் மாறவில்லை. அதுவே நமது ஆர்வமாகவும் மாறிவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சில சிக்கலான தொழில்நுட்பங்கள் உருவாகின்றன என்று யாராவது சொன்னால் பலர் அதை நம்பமாட்டார்கள். பலர் அதை கிண்டல் செய்வார்கள்.

ஆனால் இன்று அதே மக்கள் நாட்டின் வெற்றியைக் கண்டு வியக்கிறார்கள். தன்னிறைவு பெற்ற இந்தியா, அனைத்து துறைக ளிலும் அதிசயங்களைச் செய்து வருகிறது.

ஒரு காலத்தில் செல்போன்களை இறக்குமதி செய்த இந்தியா, இப்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தியாளராக மாறியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை அதிகம் வாங்கும் நாடாக இருந்த இந்தியா இன்று 85 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

விண்வெளி தொழில்நுட்பத்தில், நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. காத்திருத்தல், சிந்தித்தல், நடவடிக்கை எடுத்தல் என்ற மந்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்.

சைபர் மோசடி விவகாரத்தை சமாளிக்க மாநிலங்களுடன் புலனாய்வு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. டிஜிட்டல் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. இதுபோன்ற குற்றத்தை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Tags:    

Similar News