இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரிப்பு: பொறுப்பேற்றார் கெஜ்ரிவால்

Published On 2022-11-04 07:03 GMT   |   Update On 2022-11-04 07:03 GMT
  • டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.
  • அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும் என கெஜ்ரிவால் தகவல்

புதுடெல்லி:

தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளால் டெல்லி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.

இந்நிலையில் காற்று மாசுபாடு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

காற்று மாசுபாடு என்பது அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனை. வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டுள்ளன. டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். ஆனால், பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களே ஆகின்றன. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும்.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இது மற்றவர்கள் மீது குறை சொல்லும் நேரம் அல்ல. மோசமான காற்றின் தரத்திற்கு கெஜ்ரிவால் அரசு மட்டுமே பொறுப்பல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News