இந்தியா (National)

வயநாட்டுக்கு ரெட் அலெர்ட்.. தொடரும் கனமழையால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம்..!

Published On 2024-07-30 03:04 GMT   |   Update On 2024-07-30 03:04 GMT
  • முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
  • தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்டுப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகன மழைக்கான ரெட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோட்டயம், வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News