இந்தியா

தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேவுக்கு தகுதி இல்லை: பட்னாவிஸ் பதிலடி

Published On 2023-05-12 03:15 GMT   |   Update On 2023-05-12 03:15 GMT
  • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது.
  • இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மும்பை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

மகாவிகாஸ் அகாடி தலைமையிலான ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. இன்று மகாவிகாஸ் அகாடியின் சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசு சட்டப்படி தான் அமைக்கப்பட்டது என்பதில் இனிமேல் யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.

தார்மீக உரிமை பற்றி பேச உத்தவ் தாக்கரேக்கு எந்த தகுதியும் இல்லை. 2019-ம் ஆண்டு மக்கள் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். எனவே தார்மீகம் பற்றி பேசுவது உத்தவ் தாக்கரேக்கு பொருந்தாது. உத்தவ் தாக்கரே தார்மீக அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. வேறு வழியில்லாமல் பயத்தின் காரணமாக பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டை தீர்ப்பை வரவேற்றார்.

அவர் " சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வாய்மையின் வெற்றி. சபாநாயகர் தகுதியின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் முடிவு எடுப்பார். உத்தவ் தாக்கரே தரப்பினர் அவர்களின் திருப்திக்காக எங்களது அரசு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என கூறி வந்தனர். அது பொய் என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. போதிய எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தான் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார் " என்றார்.

Tags:    

Similar News