ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள்: டெல்லி-ஐதராபாத், சென்னை-ராஜஸ்தான் மோதல்
- 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும்.
- டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள பத்து அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக் போட்டியில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
மற்றொரு போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியி எதிர்கொண்டு விளையாடுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி உள்ளூரில் நடந்த தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை தழுவியது.
கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நல்ல நிலைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ராஜஸ்தான் அணி எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடங்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
ஐ.பி.எல். தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சென்னை அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.