Role வேணா மாறி இருக்கலாம்.. மனநிலை அப்படியேதான் இருக்கு- ரோகித் சர்மா
- மும்பை அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை.
- நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
3 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை 2 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடுகிறார்.
இந்நிலையில் எனது பதவி மாறியிருக்கலாம். ஆனால் அணிக்காக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தேன். இப்போது, நான் தொடக்க வீரராக இருக்கிறேன். நான் கேப்டனாக இருந்தேன். இப்போது, கேப்டனாக இல்லை. நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.
எனவே, பாத்திரங்கள் (Role) மாறிவிட்டன. நிறைய மாறிவிட்டன. ஆனால் மனநிலை அப்படியே உள்ளது. இந்த அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை. அதுதான் வெளியே சென்று ஆட்டங்களையும் கோப்பைகளையும் வெல்வது. அதற்காகவே மும்பை இந்தியன்ஸ் பெயர் பெற்றது. பல ஆண்டுகளாக, நாங்கள் கோப்பைகளை வென்றுள்ளோம். யாரும் நம்பாத சூழ்நிலைகளில் இருந்து ஆட்டங்களை மாற்றியமைத்துள்ளோம்.
எங்களிடம் பல இளம் இந்திய வீரர்களும் சிறந்த திறமைகளை கொண்டுள்ளனர். அவர்களுடன் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டாடா ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் பெருமையைக் கொண்டு வருவதே எனது இலக்கு.
என்று ரோகித் சர்மா கூறினார்.