சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தோம்- வெற்றி குறித்து சுப்மன் கில் கருத்து
- பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது.
- இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.
பெங்களூரு:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.
லிவிங்ஸ்டன் 40 பந்தில் 54 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 21 பந்தில் 33 ரன்னும் (5 பவுண் டரி, 1 சிக்சர்), டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய்கிஷோர் 2 விக்கெட்டும், அர்ஷத்கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 170 ரன் இலக்கை 13 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் எடுத்தது. அந்த அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோஸ் பட்லர் 39 பந்தில் 73 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 36 பந்தில் 49 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ரூதர் போர்டு 18 பந்தில் 30 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், ஹாசல்ஹவுட்டுக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன்கில் கூறியதாவது:-
எங்கள் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டுகிறேன். குறிப்பாக பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றியது பாராட்டத்தக்கது. இந்த ஆடுகளத்தில் 169 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது சிறந்த முயற்சியாகும்.
இந்த ஆடுகளத்தில் 250 ரன்கள் வரை எடுக்கலாம்.அதே நேரத்தில் தொடக்கத்தில் விக்கெட்டுகளையும் கைப்பற்றலாம். 7 முதல் 8 ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் கைக் கொடுத்தது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் வெற்றி பெற முடிந்தது. எங்களது பேட்டிங்கும் நன்றாக அமைந்தது. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் வரிசையை மாற்றி அமைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு அணி முதல் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் கூறும்போது, '20 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது' என்றார்.
குஜராத் அணி 4 போட்டி யில் ஐதராபாத்தை 6-ந்தேதி எதிர்கொள்கிறது. பெங்களூரு அணி அடுத்த ஆட்டத்தில் மும்பையை 7-ந்தேதி சந்திக்கிறது.