அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு
- நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
- அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.
சென்னை:
அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது.
நீண்ட ஆண்டுகளாக மக்களால் அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடை மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த நடைமேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.
அந்த நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு அந்த நடைமேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதையடுத்து அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.
அதன்படி புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப்பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கலாம் என்றும் முடிவு செயப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அந்த சுரங்க பாதையை சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் அருகில் மார்க்கெட் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகம் வருகின்றன. சிறிய பஸ்களும் அங்கு இயக்கப்படுகின்றன.
இந்த வாகனங்கள் அனைத்தும் சுரங்க பாதை வழியாக இயக்கப்படும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தகைய வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் அம்பத்தூரில் இருந்து வெங்கடாபுரம், கள்ளிக்குப்பம், கருக்கு, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேனாம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள் மிக மிக எளிதாக செல்ல முடியும்.
அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.
தற்போது காலை, மாலை நேரத்தில் அம்பத்தூர் கனரக வங்கி பஸ் நிறுத்தம் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கட்டப்படும் புதிய சுரங்கப் பாதையை பெரிதாக கட்டினால் நிறைய வாகனங்கள் அந்த பாதையை பயன்படுத்தும்.
இதனால் அம்பத்ரிதூல் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இதை கருத்தில் கொண்டு அம்பத்தூர் ரெயில் நிலைய சுரங்கப் பாதையை பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.