ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் உயிரிழப்பு
- நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.
இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.
இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.
கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.