தமிழ்நாடு செய்திகள்

தென்பெண்ணையாற்றில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான சுடுமண் குடுவை, குறியீடு ஓடுகள் கண்டெடுப்பு

Published On 2025-02-23 09:02 IST   |   Update On 2025-02-23 09:02:00 IST
  • தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.
  • ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

புதுப்பேட்டை:

பண்ருட்டி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்று படுகையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ராஜராஜ சோழன் காலத்து செப்புநாணயம், 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்து விநாயகர் சிற்பம் மற்றும் அகல் விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகை பிடிப்பான் உள்ளிட்ட பொருட்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது நடத்திய கள ஆய்வில் சுடுமண் குடுவை, குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி வரலாற்று துறை 2-ம் ஆண்டு மாணவர் ராகுல், வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய குறியீடு பொறித்த சிவப்பு நிற சுடுமண் குடுவை மற்றும் சிவப்பு, வெள்ளை நிற குறியீடு ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் கண்டெடுக்கப்பட்ட குறியீடு ஓடுகள், ஏற்கனவே ஈரோடு அருகே உள்ள கொடுமணல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளோடு ஒத்துள்ளதை காண முடிகிறது.

அதாவது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இந்த குறியீட்டு காலத்தை கணிக்க முடிகிறது என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், தொடர்ந்து எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News