தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு- பூங்காவை பராமரிக்க அறிவுறுத்தல்

Published On 2024-11-22 12:44 GMT   |   Update On 2024-11-22 12:45 GMT
  • செம்மொழி சிற்ப பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார்.
  • கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பயணிகள் தங்கும் அறைகள், நீச்சல் குளம், கழிப்பறைகள், கட்டிடங்கள், சமையல் கூடம் மற்றும் வளாகத்தில் உள்ள செம்மொழி சிற்ப பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். பூங்காவை பராமரித்து பிரபலமாக்க அறிவுறுத்தினார். 

பின்னர், மாமல்லபுரத்தில் பழைய சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, பேருந்து நிலையம் அருகே மரகத பூங்காவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் விளக்குகள் மூலம் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணி மற்றும் 5கோடி மதிப்பீட்டில் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் 3டி அனிமேஷன் திட்டப்பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

முன்னதாக, திருவிடந்தையில் நித்தியகல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 223 ஏக்கரில் "ஆன்மீக கலாச்சார பூங்கா" அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது, சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கல்பட்டு கலெக்டர் அருண் ராஜ், சப்-கலெக்டர் நாராயண சர்மா, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், காஞ்சிபுரம் திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News