உலகம்

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: இந்தியாவுடன் இணைய பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் அறிவுறுத்தல்

Published On 2023-07-22 11:31 GMT   |   Update On 2023-07-22 11:31 GMT
  • தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.
  • அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர உள்ளதாக ஆர்த்தி பிரபாகர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைப்பதில் இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் இன்று தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்கும் வழிமுறைகள் குறித்து கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் செயலாற்றி வருகிறது.

இந்தியாவில் பிறந்த அமெரிக்க பொறியாளரான ஆர்த்தி பிரபாகர், அமெரிக்க வெள்ளை மாளிகையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான அறிவியல் ஆலோசக அலுவலகத்தின் 12வது இயக்குனர் ஆவார்.

இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஈடுபடும் நிறுவனங்களை தாங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்கும் வகையில் செயல்பட வைக்க முயற்சித்து வருகிறோம். தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் எடுக்கக்கூடிய நிர்வாக நடவடிக்கைகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவின் தீங்குகளை சமாளிக்கும் திறனை அதிகரிக்கவும், செயற்கை நுண்ணறிவை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தவும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க அதிபர் தயாராக உள்ளார்.

இந்த பிரச்சனையில் நிர்வாக ரீதியாக தற்போது இவ்வளவுதான் செய்ய முடியும். இதற்கு பிறகு அமெரிக்க பாராளுமன்றத்தின் மூலமாக சட்டம் கொண்டு வர போகிறோம். பின்னர் இதற்கான கருத்து பரிமாற்றங்களுடன் இந்தியா உட்பட நமது சர்வதேச நட்பு நாடுகளுடன் சேர்ந்து செயலாற்றுவோம்.

இது ஒரு உலகளாவிய தொழில்நுட்பம். இது எல்லா இடங்களிலும் உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்கிறார்கள். இது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கப் போகிறது.

இதன் போக்கை வடிவமைக்க ஒத்த சிந்தனை கொண்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

கடந்த மாதம் வாஷிங்டன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் சந்தித்தபோது நடைபெற்ற கருத்து பரிமாற்றங்களில் செயற்கை நுண்ணறிவும் முக்கியமான ஒன்றாக இருந்தது.

இவ்வாறு ஆர்த்தி கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News