காசாவில் சிக்கித் தவித்த 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்பு
- கடந்த வாரம் ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியதால் எல்லையை கடந்துசெல்லும் பகுதி மூடப்பட்டது.
- ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் சிக்கிக்கொண்டனர்.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
இதற்கிடையே, ரபா பகுதியை கடந்த வாரம் இஸ்ரேலின் ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து காசாவின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், காசாவில் 20 அமெரிக்க டாக்டர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.