கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
- இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்ற பெண் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
- மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் தீர்வாக கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சுகமான வாழ்க்கையை வாழவும், பணம் சம்பாதிக்கவும் மக்கள் பல வேலைகளை நாடுகிறார்கள். என்ஜினீயரிங், மருத்துவம் போன்றவை பல இளைஞர்களின் தேர்வுகளாக உள்ளது. அதே நேரத்தில் சிலர் சற்று வினோதமாக வாழ்க்கை பாதையை தேர்வு செய்கிறார்கள்.
அந்த வகையில் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்ற பெண் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் தீர்வாக கூறப்படுகிறது. இதனால் அனிகோவுக்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். 42 வயதான அனிகோ கடந்த 3 ஆண்டுகளாக இந்த தொழிலை நடத்தி வருகிறாராம்.
தற்போது 1 மணி நேரத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7,400 வசூலிக்கிறார். சிலர் இந்த அமர்வை நீட்டித்து, கூடுதல் பணம் கொடுத்து தங்களது மன அழுத்தத்தை போக்கி கொள்கிறார்கள். இதற்காக கூடுதல் பணம் வசூல் செய்யப்படுகிறது.
இதன்மூலம் அனிகோ லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து அனிகோ ரோஸ் கூறுகையில், அரவணைப்பு ஒரு நபருக்கு மகிழ்ச்சியையும், மன அழுத்தம் மற்றும் தனிமையில் இருந்து விடுதலையும் தருகிறது. ஒரு நபர் சோகமாகவோ, மன அழுத்தமாகவோ இருந்தால் அவர்களின் மன ஆரோக்கியம் மனித தொடுதலின் மூலம் மேம்பட தொடங்குகிறது. என்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் 20 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட முதியவர்கள் வரை அடங்குவார்கள் என்றார்.