செனகல் நாட்டில் கலவரம்: போலீசார்-எதிர்க்கட்சியினர் மோதலில் 9 பேர் பலி
- செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக உள்துறை மந்திரி அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே டியோம் கூறும்போது, "வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.