இரண்டாம் முறை அதிபரானால்? டிரம்பின் அஜெண்டா-47
- மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் ஆட்சி அமைப்பார்
- டிரம்பின் செயல்திட்ட வடிவம் அஜெண்டா-47 என அழைக்கப்படுகிறது
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (77) தீவிரமாக களம் இறங்கி உள்ளார். மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவி வகிப்பார்.
அதிபர் தேர்தலில் வென்றால், நாட்டின் வளர்ச்சிக்காக டிரம்ப் எடுக்க போகும் முக்கிய நடவடிக்கைகளை 'அஜெண்டா 47' (Agenda 47) என அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். அதன்படி, தனது முந்தைய பதவி காலத்தில் தனது திட்டங்களுக்கு நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் தடையாய் இருந்ததாக கருதும் டிரம்ப், இம்முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தயார் செய்து வருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நகரங்களில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை அமெரிக்க நகரங்களுக்கு வெளியே குடியமர்த்துவது, தேசபக்தி உள்ள ஆசிரியர்களையே கல்வி நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்துவது, அனைத்து இறக்குமதிகளுக்கும் ஒரு உலகளாவிய அடிப்படை கட்டணத்தை நிர்ணயிப்பது, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவிற்குள் நுழையும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் அந்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை ரத்து செய்வது, ரஷியாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கான பல கோடி மதிப்பிலான உதவிகளை நிறுத்துவது, எரிசக்திக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது மற்றும் அரசுக்கு எதிராக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்வது என பல அதிரடி நடவடிக்கைகள் இந்த 'அஜெண்டா 47' மூலம் எடுக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
அமெரிக்க வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் வகுக்கும் இந்த திட்டங்களுக்கு ஜனநாயக கட்சியிலும் ஒரு சிலர் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் மீது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளில் வரும் தீர்ப்பை பொறுத்தே அவர் அதிபராவது முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.