அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ராணுவம் இணைந்து ஏமன் மீது தாக்கு
- ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
- அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஹவுதி தாக்குதலை முறியடிக்க ஒன்றிணைந்துள்ளன.
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சிக்குழு செங்கடலில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்த போதிலும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை.
இதனால கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, இங்கிலாந்து ராணுவம் ஒன்றாக இணைந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகள், டிரோன்கள், லாஞ்சர்கள் போன்வற்றை சேமித்து வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு உளவு மற்றும் கண்காணிப்பு பணி ஆகியவற்றில் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், கனடா, நெதர்லாந்து நாடுகள் பங்களிப்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. எங்களுடைய நோக்கம் செங்கடலில் பதற்றம் தணிய வேண்டும். நிலைத்தன்மை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எனவும் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் உலகின் முக்கிய கடல் போக்குவரத்து வழியான செங்கடலில் எளிதான வணிக போக்குவரத்து நடைபெறுவதற்கும், உயிரைக் காப்பாற்றுவதற்கும் ஹவுதிக்கு பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் எனவும் எச்கரிக்கை விடுத்துள்ளது.