கிரீன் கார்டு வாங்குவதற்குள் ஆயுளே முடிந்து விடும்: வேதனையில் இந்தியர்கள்
- நிரந்தர வசிப்பிட அட்டையை வழக்கத்தில் கிரீன் கார்டு என குறிப்பிடுவார்கள்
- தற்போதைய நிலவரப்படி காத்திருக்கும் காலம் சுமார் 134 வருடங்கள் ஆகும்
உயர்கல்விக்காகவும், பணியின் காரணமாகவும் அமெரிக்கா சென்று அங்கேயே தங்கும் இந்தியர்களில் பலர் அந்நாட்டிலேயே நிரந்தரமாக குடியேற விண்ணப்பங்களை தாக்கல் செய்வது வழக்கம்.
அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு பல நிலை விசாரணைகளுக்கு பிறகு அங்கேயே தங்குவதற்கான நிரந்தர வசிப்பிட அட்டை (Permanent Resident Card) வழங்கப்படும். அலுவல் ரீதியாக பி.ஆர். கார்டு என குறிப்பிடப்படும் இது, வழக்கத்தில் கிரீன் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.
கிரீன் கார்ட் பெற்று விட்டால் அதனை ஒரு பெருமையாக கருதி அதன் காரணமாக நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடும் அளவிற்கு அதனை பெறுவதற்கு கடும் போட்டி அங்கு நிலவுகிறது.
பணியின் காரணமாக நிரந்தரமாக அமெரிக்காவில் தங்க கிரீன் கார்டிற்கு விண்ணப்பித்து இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 18 லட்சமாகும். இது அந்நாட்டில் குடியேற விண்ணப்பித்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர் இந்தியர்கள்.
இந்நிலையில், புதிதாக குடியுரிமைக்காக விண்ணப்பிக்க விரும்பும் இந்தியர்களுக்கு "காத்திருப்பு காலம்" சுமார் 134 வருடங்கள் ஆகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணியின் காரணமாக அங்கேயே தங்க விரும்பி விண்ணப்பித்து இருப்பவர்களில் அனேகமாக 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் இதனை பெறுவதற்கு முன்பாகவே இறந்து விடுவார்கள் என்றும் அதில் 90 சதவீதம் பேர் இந்தியர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் உள்ள முக்கிய வேலைகளுக்கு பணியமர்த்த இந்தியர்களையும், சீனர்களையுமே அமெரிக்க நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், அங்குள்ள குடியுரிமை சட்டப்படி, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு, மொத்த விண்ணப்பிங்களில் பணிசார்ந்த கிரீன் கார்டு விண்ணப்பங்கள் 7 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
சட்டரீதியான குடியேறுதலுக்கான முயற்சிகளில் உள்ள நீண்ட காலதாமதத்தை தவிர்க்க தற்போதைய ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், விண்ணப்ப தொகுப்பில் சேர்க்கப்பட்டு பிறகு அது ஏற்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு இறுதியாக கிரீன் கார்டு வாங்குவதற்கு அதிர்ஷ்டமும் தேவைப்படும் எனும் நிலை தோன்றி விட்டதாக அங்கு குடியேற துடிக்கும் இந்தியர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.