என் மலர்
சினிமா செய்திகள்
அது வதந்தி..! நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்
- மதகஜராஜா திரைப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
சுந்தர்.சி 2013 ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திரைக்கு வரவில்லை. இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி என பலரும் நடித்துள்ளனர்.
படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்ற மை டியர் லவ்வர் பாடல் 12 வருடங்கள் முன்பே மிக வைரலானது. இப்பாடலை விஷால் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது. இருப்பினும் படம் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். சுந்தர் சி, விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து பேசிய விஷால் குரல் நடுக்கத்துடன், பேச்சில் தடுமாற்றம் மற்றும் கையில் மைக்கை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டே பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த காணொளி இணையத்தில் வைரலானது. விஷாலின் மேல் உள்ள அக்கறையில் ரசிகர்கள் அனைவரும் சீக்கிரம் குணமாகி வாருங்கள். என பதிவிட்டு வந்தனர். சிலர் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால் இப்படி ஆயிற்று என பல செய்திகளை பரப்பினர்.
இதைதொடர்ந்து, விஷால் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளித்துள்ளனர். அவருக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்ப்பட்டதால்தான் இவ்வாறு ஆனதற்கு காரணம் என டாக்டர் சான்றிதழுடன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தன.
ஆனால் இதற்கு விஷாலில் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், " விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார்.
ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.