search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாலிவுட் நடிகருக்கு கத்திக்குத்து - மருத்துவமனையில் அனுமதி
    X

    பிரபல பாலிவுட் நடிகருக்கு கத்திக்குத்து - மருத்துவமனையில் அனுமதி

    • கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
    • நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான். இவர் போபால் அரச குடும்பத்தை சேர்ந்தவர். மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி-நடிகை சர்மிளா தாகூர் தம்பதியினரின் மகன் ஆவார்.

    சைஃப் அலி கான் 2012-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சைஃப் அலி கான்-கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள். சைஃப் அலி கான் குடும்பத்தாருடன் வீட்டில் வழக்கம் போல் தூங்கிக்கொண்டு இருந்தார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம மனிதன் ஒருவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவன் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வந்தான். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.

    கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

    அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.

    சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இது குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி நீராஜ் உத்தமணி கூறியதாவது:-

    சைஃப் அலி கான் அதிகாலை 3.30 மணிக்கு எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவற்றில் 2 ஆழமான காயம். ஒரு காயம் அவருக்கு முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நிதின் டாங்கே, உடல் அழகு அறுவை சிகிச்சை நிபுணர் நீலா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை 2.30 மணி நேரம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சைஃப் அலி கான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே அவரது மனைவி கரீனா கபூர் மருத்துவமனைக்கு வந்தார்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறிய தாவது:-

    கொள்ளை அடிக்கும் நோக்கில் மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சைஃப் அலி கானை தாக்கிய மர்ம மனிதனை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 படைகள் மும்பைக்கு வெளியே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல சைஃப் அலி கான் வீட்டில் பணிபுரியும் 3 உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கேள்விப்பட்டதும் பாலிவுட் திரை உலகத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சைஃப் அலி கான் தாக்கப்பட்டது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    கொள்ளை முயற்சி சம்பவத்தில் சைஃப் அலி கான் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனால் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பொதுவாக பிரபலங்கள் வீடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கும். இந்த பாதுகாப்பையும் மீறி மர்ம மனிதன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குளறுபடி தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சல்மான் கானை கொலை செய்யும் முயற்சியில் அவரது வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதே போல சல்மான்கானின் பங்களா வீட்டிலும் கொல்ல முயற்சி நடந்தது. பிரபல ரவுடியான பிஷ்னோய் கும்பல் அவருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கொள்ளைக்காக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    54 வயதான நடிகர் சைஃப் அலி கான் தேவரா, ஆதி புருஷ், ஓம்கரா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    சைஃப் அலி கான் தாக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×