என் மலர்
சினிமா செய்திகள்
பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த விஷாலை பங்கமாக கலாய்த்த நடிகர் பிரகாஷ் ராஜ்
- நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
- இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.
நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.
அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.