search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜவான் இந்தி படமல்ல இந்திய படம்- அனிருத் பேச்சு
    X

    'ஜவான்' இந்தி படமல்ல இந்திய படம்- அனிருத் பேச்சு

    • நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘ஜவான்’.
    • இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் முத்துராஜ், நடன இயக்குனர் ஷோபி, 'ஜவான்' படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது:- என்னுடைய சகோதரர் இயக்குனர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குனர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல சவாலானது. பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

    ஷாருக்கான் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.


    கிங் கான் ஷாருக்... நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். ஷாருக்கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

    Next Story
    ×