என் மலர்
சினிமா செய்திகள்
அவங்களே புரொமோஷனுக்கு வராங்க.. ஆனால்..! அமீர் வருத்தம்
- விமல் நடிப்பில் இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "குலசாமி".
- இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
நடிகர் விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குலசாமி. இப்படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார். மிக் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் பேசியதாவது, இயக்குனர் சரவண சக்தி என்னுடைய நண்பர். நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குனர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.
இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும். அவர்கள் வராதது எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள். இவ்வாறு அமீர் பேசினார்.
குலசாமி திரைப்படம் வருகிற ஏப்ரல் 21 ஆம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.