என் மலர்
சினிமா செய்திகள்
சோனியா காந்தியாக நடிக்கும் ஜெர்மன் நடிகை
- 'யாத்ரா 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
- இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் 'யாத்ரா'. இந்த படத்தை இயக்குனர் மஹி வி ராகவ் இயக்கியிருந்தார். இதில், ஒய்.எஸ்.ஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்பாகம் ஆந்திர முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆரின் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படுகிறது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணம் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் சோனியா காந்தியாக ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிக்கிறார். இவர் பல்வேறு விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் அகில் மிஸ்ராவின் மனைவி ஆவார். சுசானே பெர்னார்ட்டின் சோனியா காந்தி கதாபாத்திர புகைப்படத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வரவேற்பு பெற்று வருகிறது.
'யாத்ரா- 2' பிப்ரவரி 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.