search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
    X

    நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    • பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தில் ஒவ்வொரு படங்கள் வெளியாகும் பொழுதும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வந்து படம் பார்த்து செல்வார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்கள் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ரோகிணி திரையரங்கிற்கு வருவார்கள்.

    இன்று ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

    தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தனது சமூக வலைதளத்தில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது, எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என்று பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவிள்ளை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் விஜய பாஸ்கர் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து திரையரங்கிற்கு அமைந்தகரை தாசில்தார் மாதவன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், நரிக்குறவ பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்தும் திரையரங்க நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×