என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
20 ஓவர் உலகக்கோப்பை: முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா மோதல்
- அமெரிக்கா- கனடா அணிகள் இன்று களம் காணுகின்றன.
- உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.
20 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா அணிகள் களம் காணுகின்றன.
அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.
ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.
இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன.
அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும்.
வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் நீயா-நானா குடுமிபிடி ஆரம்பிக்கும்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு வரும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும்.
அதே சமயம் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் அளித்தால், கணிப்புகள் மாறலாம்.
இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகி விட்டது. 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு ஐ.சி.சி. உலக போட்டிகளில் ஒரே சறுக்கல் தான். ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி அந்த நீண்டகால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாகும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.
இன்றைய தொடக்க நாளில் புதுமுக அணிகளான அமெரிக்காவும், கனடாவும் டல்லாஸ் நகரில் உள்ள கிரான்ட் பிராரி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் பட்டேல் இந்தியாவைச் சேர்ந்தவர். மேலும் 3 இந்தியர்கள் அந்த அணியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஓய்வுக்கு பிறகு அமெரிக்க அணியில் இணைந்து விட்டதால் அந்த அணி வலுப்பெற்றுள்ளது. உள்ளூர் சூழலில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் வரிந்து கட்டுவார்கள்.
கனடா அணி சாத் பின் ஜாபர் தலைமையில் களம் இறங்குகிறது. இவ்விரு அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் அமெரிக்காவும், 2-ல் கனடாவும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
அமெரிக்கா: மோனக் பட்டேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ், ஆன்ட்ரியாஸ் கவுஸ், நிதிஷ்குமார், ஷயான் ஜஹாங்கிர், ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், மிலிண்ட் குமார், நிசார்க் பட்டேல், ஷட்லே வான் ஸ்சால்க்விக், அலிகான், ஜஸ்தீப்சிங், நோஸ்துஸ் கென்ஜிகே, சவுரப் நெட்ராவல்கர்.
கனடா: சாத் பின் ஜாபர் (கேப்டன்), நவ்னீத் தலிவால், ஆரோன் ஜான்சன், ஸ்ரேயாஸ் மோவா, ரவிந்தர்பால் சிங், தில்பிரீத் பஜ்வா, ஜூனைட் சித்திக், நிகோலஸ் கிர்டான், பர்கத் சிங், ரேயான் பதான், ஹர்ஷ் தாகெர், நிகில் தத்தா, ஜெரிமி கார்டன், திலோன் ஹெய்லிஜர், ரிஷிவ் ஜோஷி, கலீம் சனா.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்