search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
    X

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை- ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

    • இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
    • ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் கடைசி லீக்கில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கையும், ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

    இந்த பிரிவில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை பதம் பார்த்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் அந்த அணியுடன் வங்காளதேசமும் சேர்ந்து சிக்கலின்றி சூப்பர்4 சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

    மாறாக ஆப்கானிஸ்தான் வெற்றி கண்டால் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி என்று சமநிலையுடன் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்வாகும்.

    தற்போதைய சூழலில் இலங்கையின் ரன்ரேட் (+.0.951) வலுவாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் மோசமாக (-1.780) உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சூப்பர்4 சுற்று அதிர்ஷ்டம் கிட்ட வேண்டும் என்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். அதாவது ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 275 ரன்கள் சேர்க்கிறது என்றால், எதிரணியை குறைந்தது 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தாக வேண்டும். இதே போல் இலக்கை விரட்டிப் பிடிக்கும் (சேசிங்) நிலை ஏற்பட்டால் 35 ஓவருக்குள் எட்ட வேண்டும். அப்போது தான் ரன்ரேட்டில் முன்னிலை பெற முடியும். லாகூர் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

    ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×