search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் நீடிக்கும் இங்கிலாந்து
    X

    நமீபியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் நீடிக்கும் இங்கிலாந்து

    • மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
    • போட்டியின் பாதியில் மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    டிரினிடாட்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து -நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சிறிது நேரத்தில் மழை நின்றது. தொடர்ந்து மைதானத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

    மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக மீண்டும் குறைக்கப்பட்டது.

    தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபிய அணி பேட்டிங் செய்தது.

    ஆனால் இங்கிலாந்து அணியினரின் அபார பந்துவீச்சால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நமீபிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இறுதியில் நமீபிய அணியால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

    இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×