search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி
    X

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அபார வெற்றி

    • வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களும் 2-வது இன்னிங்சில் 136 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் முதல் இன்னிங்சில் 7 விக்கெடும் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 7 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 371 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே இந்த இன்னிங்சிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது. இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோசுவா டா சில்வா- அல்சாரி ஜோசப் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஜோசுவா டா சில்வா 9 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அல்சாரி ஜோசப் 8 ரன்னிலும் சமர் ஜோசப் 3 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 47 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டும் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

    Next Story
    ×