search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நான் ஜீரோவில் இருக்கிறேன்: பிராட்மேன் சொன்னதை சர்பராஸ் கானுக்கு நினைவூட்டும் கவாஸ்கர்

    • ஐந்து இன்னிங்சில் மூன்று அரைசதம் அடித்துள்ளார் சர்பராஸ் கான்.
    • தேனீர் இடைவேளைக்குப்பின் முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன் குவித்துள்ளது. கில், ரோகித் சர்மா ஆகியோர் சதம் விளாசிய நிலையில் ஜெய்ஸ்வால், தேவ்தத் படிகல், சர்பராஸ் கான் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

    சர்பராஸ் கான் தனது ஐந்து இன்னிங்சில் 3 அரைசதம் விளாசியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய ஸ்கோர்களை எட்டிய அவர் இன்னும் மூன்று இலக்க ரன்னை (100) தொடவில்லை.

    நேற்றைய ஆட்டத்தில் சர்பராஸ் கான் தொடக்கத்தில் 30 பந்தில் 9 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின் 55 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 25 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மதிய தேனீர் இடைவேளையின்போது அவர் அவர் 59 பந்தில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே சர்பராஸ் கான் ஆட்டம் இழந்தார். சோயிப் பஷீர் வீசிய பந்தை ஆஃப் சைடு கட் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பந்து ஷார்ட் ஆக வீசப்படவில்லை. டாஸ்அஃப் ஆக வீசப்பட்ட பந்து சற்று கூடுதலாக பவுன்ஸ் ஆனது. இதனால் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனார்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்தையே அவர் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்கொண்ட விதம் சுனில் கவாஸ்கருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.

    பொதுவாக டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். அரைசதம் அடித்து விட்டோம், சதம் அடித்துவிட்டோம் என கவனக்குறைவாக விளையாடினால் விக்கெட்டை இழக்க நேரிடும்.

    கவாஸ்கர் டான் பிராட்மேனுடன் உரையாடியபோது, இது தொடர்பாக பிராட்மேன் கூறிய கருத்தை கவாஸ்கர் சர்பராஸ்கானுக்கு நினைவூட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "டான் பிராட்மேன் உடன் உரையாடும்போது அவர் என்னிடம் "நான் 200 ரன்கள் அடித்திருந்தாலும் கூட ஒவ்வொரு பந்தையும் நான் எதிர்கொள்ளும்போது, என் மனதில் நான் ஜீரோவில் இருக்கிறேன் என்றுதான் நினைத்துக் கொள்வேன்" என்றார். ஆனால் சர்பராஸ் கான் இங்கு இதுபோன்ற ஷாட்டை செசன் தொடங்கிய முதல் பந்திலேயே அடித்துள்ளார்" என்றார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்னில் சுருண்ட நிலையில், இந்தியா 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பும்ரா 19 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×