என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அரையிறுதியை உறுதி செய்யுமா இந்தியா? ஜிம்பாப்வேவுடன் நாளை மோதல்
- ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
- இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.
மெல்போர்ன்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.
இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை நாளை (6- ந் தேதி ) எதிர் கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. அரை இறுதியில் நுழைய இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.
வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் திக்கு முக்காடிதான் வெற்றி பெற்றது. அதாவது தோல்வியில் இருந்து தப்பி வெற்றி கிடைத்தது.
இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். ஜிம்பாப்வே அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து, பாகிஸ்தான்-வங்காள தேசம் மோதும் போட்டிக்கு பிறகுதான் இந்தியா விளையாடும் ஆட்டம் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் ஆடும்.
பேட்டிங்கில் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 4 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 220 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து நிலையாகவும், அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.
லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே.
தினேஷ் கார்த்திக் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா நாளைய ஆட்டத்திலாவது அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று எதிர் பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (9 விக்கெட்), ஹர்த்திக் பாண்ட்யா (6 விக்கெட்), முகமது ஷமி (4 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.
ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 3 புள்ளியுடன் இருந்தது. பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப் பட்டது. வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளிடம் தோற்று இருந்தது.
ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.






