search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து பும்ரா விலகல்?
    X

    ஐபிஎல் 2023 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து பும்ரா விலகல்?

    • ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
    • ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த பல்வேறு தொடர்களில் பங்கேற்கவில்லை. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அந்த தொடரிலிருந்து விலகினார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ரா தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த தொடரிலிருந்தும் நீக்கப்பட்டார். மேலும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும் பும்ரா இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கும் 16-வது ஐபிஎல் சீசனில் ஜஸ்ப்ரித் பும்ரா பங்கேற்கமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவிற்கு காயம் அதிகளவில் இருக்கும் நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐயின் மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்கவில்லை.

    ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் நிலையில், அவர் நேரடியாக வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    Next Story
    ×