search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    எனது ஓவரில் விராட் கோலியால் மட்டுமே அந்த சிக்சர்களை அடித்திருக்க முடியும்: ஹரிஸ் ரவூப்
    X

    எனது ஓவரில் விராட் கோலியால் மட்டுமே அந்த சிக்சர்களை அடித்திருக்க முடியும்: ஹரிஸ் ரவூப்

    • அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.
    • அந்த சிக்ஸர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று ஹாரீஸ் ரவூப் தெரிவித்தார்.

    ஆஸ்திரேலியாவில் 8-வது முறையாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பை நடைபெற்றது. அதில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.

    இருப்பினும் இந்த தொடரில் முதல் போட்டியிலேயே பரம எதிரியான பாகிஸ்தானை காலத்திற்கும் மறக்க முடியாத அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து இந்தியா தோற்கடித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

    அன்றைய நாளில் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் டி20 வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று கிட்டத்தட்ட உலகின் அனைவருமே வியந்து பாராட்டினார்கள். அதை விட 145 -150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஹாரிஸ் ரவூப் வீசிய 19-வது ஓவரில் பின்னங்காலில் நின்று நேராக அடித்த சிக்சரை பார்த்து வியந்த அத்தனை பேரும் அதை எப்படி அடித்தார் என்று இப்போதும் பேசி வருகிறார்கள். அத்துடன் டி20 உலக கோப்பை வரலாற்றில் அது மிகச்சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசியே மனமுருகி வர்ணித்தது.

    இந்நிலையில் அந்த சிக்சர்களை ஹர்திக் பாண்டியா அல்லது தினேஷ் கார்த்திக் அடித்திருந்தால் தமது மனம் வலித்திருக்கும் என்று தெரிவிக்கும் ஹாரீஸ் ரவூப் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி அடித்தது தமக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    உலகக்கோப்பையில் விளையாடிய விதமே அவருடைய கிளாஸ் ஆகும். அவர் எந்த மாதிரியான ஷாட்களை அடிப்பார் என்று நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக அந்த சிக்சர்களை அவர் அடித்த விதத்தைப் போல் உலகில் வேறு யாரும் என்னுடைய பவுலிங்கில் அப்படி ஒரு ஷாட் அடித்திருக்க முடியாது.

    ஒருவேளை தினேஷ் கார்த்திக் அல்லது ஹர்திக் பாண்டியா அந்த சிக்ஸர்களை அடித்திருந்தால் நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் அது விராட் கோலியின் பேட்டில் இருந்து வந்தது. அவரிடம் வித்தியாசமான கிளாஸ் உள்ளது.

    அந்த நேரத்தில் கடைசி 12 பந்துகளில் இந்தியாவுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நான் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தேன். மேலும் கடைசி ஓவரை வீசப்போகும் நவாஸ் ஸ்பின்னர் என்பதால் அவர் குறைந்தது 4 பவுண்டரிகளை கொடுப்பார் என்பதால் 20 ரன்களையாவது விட்டுவைக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த நிலையில் கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டது.

    அப்போது நான் ஸ்லோ பந்துகளை வீசினேன். ஆனால் விராட் கோலி அதை கச்சிதமாக கணித்து விட்டார். அந்த 4 பந்துகளில் நான் ஒரு பந்தை மட்டுமே வேகமாக வீசினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×