search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா
    X

    வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது தென் ஆப்பிரிக்கா

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

    இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    Next Story
    ×