search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை கிரிக்கெட்:  இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்
    X

    பாபர் ஆசம், ரோகித் சர்மா

    ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை மோதல்

    • துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
    • உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்ப்பு.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சு நாட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு பிரிவுகளாக அந்த அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் 'ஏ' பிரிவில் 7 முறை சாம்பியனான இந்தியா, 2 முறை ஆசிய கோப்பையை வென்ற பாகிஸ்தான், ஆங்காங் ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் 5 முறை சாம்பியனான இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெறும். 'சூப்பர் 4' சுற்றில் 4 அணிகள் விளையாடும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் 2-வது 'லீக்' போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்குகிறது.

    இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளைய போட்டி இரு நாட்டு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உலக கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்

    விராட் கோலி தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சமபலத்துடன் திகழ்கிறது. இதனிடையே, இந்த போட்டியின் முடிவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. இதனால் நாளைய போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மிகப்பெரிய பலமாக இருப்பார். அதே நேரத்தில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, முகமது வாசிம் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப் படுகிறது. 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் நாளை 10வது முறையாக மோத உள்ளன. இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 7-ல், பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), வீராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, தினேஷ் கார்த்திக், யுசுவேந்திர சாஹல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்

    பாகிஸ்தான்: பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பகர் ஜமான், ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகர் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ஹஸ்னைன், ஹரிஸ் ரவூப், முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாநவாஸ் தானி, உஸ்மான் காதிர்.

    Next Story
    ×