search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி: ஐ.சி.சி. போஸ்டர் வைரல்
    X

    இந்தியா - பாகிஸ்தான் போட்டி: ஐ.சி.சி. போஸ்டர் வைரல்

    • பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும்.
    • பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

    இந்த நிலையில் நடப்பு உலக கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இரு நாடுகள் இடையே சீரற்ற உறவு, பகைமை உணர்வு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்வுபூர்வமாகி விடுவார்கள். ஏதோ தாங்களே விளையாடுவது போல் அவர்களின் ஆர்ப்பரிப்பும், சீற்றமும், ஆக்ரோஷமும் களத்தையே சூடாக்கி விடும். அதனால் தான் பரமஎதிரிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை இப்போதே உசுப்பேற்றி இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் சூப்பர். பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.


    'ஸ்விங்' செய்வதில் வல்லவரான பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலியை தொடக்க கட்ட ஓவர்களில் சமாளிப்பது மிகவும் முக்கியம். அதை சாதுர்யமாக செய்து விட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைவதற்கு வழிபிறக்கும். அத்துடன் யாராவது ஒருவர் செஞ்சுரி அடித்தால் 300-ஐ எளிதில் கடந்து விடலாம்.

    டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.

    கடந்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 128 ரன்னில் சுருட்டி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது நிச்சயம் இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும். மேலும், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. 7 முறை போட்டுத் தாக்கிய இந்தியா அந்த எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலக கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.

    அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலுசேர்க்கிறார்கள். 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.

    சரிசம பலத்துடன் இரு அணிகளும் கோதாவில் குதிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.


    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பதால் நெருக்கடி முன்பை விட எகிறி நிற்கும். பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

    இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்ட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.

    Next Story
    ×